ஹஜ் மானியம் ரத்து: மத உணர்வுகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் மத்திய அரசின் சதி!
 
அனைத்து விதமான புனித யாத்திரைகளுக்கும் வழங்கப்படும் மானியங்களையும், நிதி ஒதுக்கீடையும் ரத்து செய்ய
பாஜக அரசு முன்வருமா? - எஸ்.டி.பி.ஐ. கேள்வி

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துறை சார்ந்த நிர்வாகிகள் கூட்டம் இன்று(டிச.26) நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.

இதனிடையே பத்திரிக்கையாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறுகையில்;

முஸ்லிம்களின் முத்தலாக் விவகாரம் தொடர்பான மத்திய அரசின் முடிவை எஸ்.டி.பி.ஐ. வன்மையாக கண்டிக்கிறது;
முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யக்கூடிய முஸ்லிம்களை தண்டிப்பதற்கான ஒரு மசோதாவை பாராளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முத்தலாக் சொல்லி விட்டால் விவாகரத்து நடைபெறாது, அது சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முத்தலாக் சொன்னவர்களை தண்டிக்கிற சட்டம் என்பது தேவையில்லாதது. மத்திய அரசு முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தை கொண்டு வருகிற முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த சட்டம் என்பது பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதற்காக கொண்டு வரப்படுகிற சட்டம் என்று மோடி அரசு கூறினாலும், எதார்த்தத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சட்டம் பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை அவமதிப்பதற்கும், அந்த சட்டத்தை குறித்த தவறான அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காகவே மத்திய அரசு இச்சட்டத்தை கொண்டுவர முயலுகிறது. எனவே, எந்த தேவையும் இல்லாமல் இச்சட்டத்தை கொண்டு வரும் இம்முயற்சியினை மோடி அரசு கைவிட வேண்டும். அதையும் மீறி மோடி அரசு இச்சட்டத்தை கொண்டுவர முற்பட்டால் முஸ்லிம்களும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்.

நாடு முழுவதும் வாழும் முஸ்லிம் அறிஞர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களின் விவகாரங்களில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக செயல்படுகிற முஸ்லிம் தனியார் சட்ட வாரியமும் மத்திய கொண்டு வரும் இச்சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. எனவே, மத்திய அரசு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தும் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.


வாக்குக்கு பணம் கொடுப்பது என்பது ஜனநாயகத்தின் மாண்பை குழிதோண்டி புதைக்கக்கூடிய செயலாகும்;

தமிழ்நாட்டில் நடைபெறுகிற பொதுத் தேர்தல்களாக இருந்தாலும், இடைத்தேர்தல்களாக இருந்தாலும் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு அதிகமாகவே முன்வைக்கப்படுகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பது என்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என்கிற கருத்து அதிகமாக முன் வைக்கப்படுகிறது. எந்த கட்சி வாக்குக்கு பணம் கொடுத்தாலும், அது கண்டிக்கத்தக்கதே. இந்த கட்சிதான் கொடுத்தது, அந்த கட்சி கொடுத்தது என்பதைத் தாண்டி தமிழக அரசியலில் இருக்கிற முக்கிய அரசியல் கட்சிகள் வாக்குக்கு கடந்த காலங்களில் பணம் கொடுத்ததாகவே குற்றம் சாட்டப்படுகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பது என்பது ஜனநாயகத்தின் மாண்பை குழிதோண்டி புதைக்கக்கூடியது. எனவே வாக்குக்கு பணம் கொடுப்பது என்கிற இந்த சீர்கேட்டை, ஜனநாயகத்தை அழிக்கக்கூடிய இந்த அழிவு சக்தியை, இல்லாமல் ஆக்க வேண்டிய பொறுப்பு, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது, அதனுடைய தலைவர்களுக்கும் இருக்கிறது. எனவே வரும் காலங்களில் நடைபெறவிருக்கிற தேர்தல்களில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதை அனுமதிக்கக்கூடாது. நாம் சார்ந்திருக்கிற கட்சி பணம் கொடுக்காது என்கிற நிலையை உருவாக்குவதற்கு அனைத்து கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் முன்வர வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்;

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிளவுபட்டு நிற்கும் அ.இ.அ.தி.மு.க,வில் யார் மக்களுடைய அங்கீகாரத்திற்குரியவர் என்பதே மிக முக்கியமான விவாதமாக மாறிப்போன காரணத்தினால் தி.மு.க இந்த தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டதாக நான் கருதுகிறேன். அ.தி.மு.க,வை உடைக்க வேண்டும் என்கிற பா.ஜ.க,வின் சூழ்ச்சிக்கு ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியினர் உடன்பட்டு ஒத்துழைப்பு நல்குகிறார்கள் என்கிற எண்ணம் மக்களுக்கு வந்து விட்டது. எனவே அ.தி.மு.கவில் பா.ஜ.கவின் தலையீட்டை விரும்பாத மக்கள் தினகரனுக்கு பெருவாரியாக வாக்களித்து இருக்கிறார்கள். இதை புரிந்துகொண்டு பா.ஜ.க.வோடு இருக்கும் உறவை அ.தி.மு.க.வின் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியினர் உடனடியாக துண்டித்து தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கக்கூடிய விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிற நிலையில் தன்னை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதோடு, தினகரனோடு இணைந்து அ.தி.மு.க.வை வலிமைப்படுத்துகிற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

 

       

பத்தாண்டுகள் கழித்த சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜன.06ந் தேதி கோவை மாபெரும் ஆர்ப்பாட்டம்;

பத்தாண்டுகள் சிறை தண்டனை கழிந்த ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற சட்டமன்றத்தின் அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல், புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. கருணையின் அடிப்படையில் ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்வதற்கு பா.ஜ.க கடந்த காலங்களில் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. ஆனால், நேற்றைய தினம் வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு உத்திரப்பிரதேசத்தில் 93 ஆயுள் சிறை கைதிகளை உத்திரபிரதேச பா.ஜ.க அரசு விடுதலை செய்திருக்கிறது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வருகிறோம். எனவே, மத்திய பா.ஜ.க அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழகத்தில் இருக்கிற அனைத்து சமூகங்களை சேர்ந்த பத்தாண்டுகள் தண்டனை பெற்ற ஆயுள் சிறை கைதிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அதோடு சிறைக்கைதிகள் சமீர், தப்ரூ மற்றும் SLE நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட அபுதாஹிர் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த இரண்டு பேரின் விடுதலை குறித்து பரிசீலிக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் 2018 ஜனவரி 06ந் தேதி கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் உடனடியாக கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்;

உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கிற ரூபாய் 20 லட்சத்தையும், காணாமல் போனவர்களையும் உயிரிழந்தவர்களாக கணக்கில் கொண்டு அவர்கள் குடும்பத்தினருக்கும் ரூபாய் 20 லட்சத்தையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சேத மதிப்பீட்டை கணக்கிட்டு உடனடியாக அதற்குறிய நிவாரண தொகையினை வழங்க வேண்டும் என தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்;

நெல்லை மாவட்டத்தில் சாலைகள் போடப்பட்டு நீண்ட காலமாகியதாலும், மழையினாலும் மிகுந்த சேதமடைந்து இருக்கிறது. மக்கள் மிகப்பெரிய சிரமத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இது குறித்து பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளை சீர் செய்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசு அதற்கு ஆவண செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாநில துணை தலைவர் நெல்லை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜாபர் உஸ்மானி, அபுபக்கர் சித்திக், அபுதாஹிர், அஹமது நவவி, முஸ்தபா, ஃபாரூக், முஜீப் ரஹ்மான்,நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர் S.S.A.கனி ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னையில் இன்று (23/10/2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர்

கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது;

 நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த மூன்றாண்டுகளாக தான் கொண்டு வந்த அனைத்து திட்டங்களிலும் தோல்வி அடைந்து செயலற்ற ஒரு அரசாக இன்று மக்கள் முன் நிற்கிறது. மேக் இன் இந்தியா, சிவிட்ச் பாரத், டிஜிட்டல் இந்தியா போன்ற பல இந்தியாக்களை முன் வைத்தார்கள். ஆனால் ஒன்றும் வெற்றி பெறவில்லை. இதே நேரத்தில் இதற்கு நேர் எதிராக பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இன்று மக்களையும், வியாபாரிகளையும் சொல்லனா துயரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு உட்படுத்தி இருக்கிறது. இந்த மூன்றாண்டுகளில் ஒரு ஜனநாயக அரசாக செயல்படுவதற்கு மாற்றாக யாரும் பாஜகவை விமர்சிக்க கூடாது, எதிர்த்து பேசக்கூடாது, கருத்து சொல்ல முன்வரக்கூடாது என்கிற ஒரு சர்வாதிகார போக்குடைய அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஊடகங்கள் யாரும் அரசை விமர்சித்தால் செய்தி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்வது, நிறுவனங்களை வருமான வரி சோதனை என்ற பெயரில் நெருக்கடிகளை உருவாக்குவது என்று இந்த அரசினுடைய சர்வாதிகார போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசை எதிர்த்து கோரிக்கை வைக்கும் விவசாயிகள், தமிழ் அமைப்புக்களை சார்ந்தவர்கள், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேனுக்கு எதிராக போராடக்கூடியவர்களை தேச துரோகிகள் என்றும் மிக மோசமாக அவர்களை மிரட்டுவதும் கொச்சைப்படுத்துவதும் போன்ற நாகரீகமற்ற செயல்களில் பாஜக தலைவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த வரிசையில்தான் மெர்சல் என்கிற திரைப்படத்தில் அரசினுடைய திட்டங்களை விமர்சித்ததற்காக படக்குழுவினர் மிக மோசமாக விமர்சிக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், காட்சிகளை நீக்க வேண்டும் என்று நிர்பந்திப்பதும், தொடர்ந்து கொண்டிருக்கிறது. மெர்சல் படத்தில் அரசை சாதரணமாகத்தான் விமர்சனம் செய்கிறார்களே தவிர கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி ஒன்றும் விமர்சனம் செய்யவில்லை. இந்த விமர்சனங்களைக்கூட தாங்க முடியாதவராக மோடியும் அவரது அரசும் இன்று இருக்கிறது. கடந்த மூன்றாண்டு காலகட்டத்தில் ஒருமுறைக்கூட ஊடகவியாலாளர்களை மோடி சந்திக்கவில்லை. அதற்கு காரணம் ஊடகவியலாளர்களை சந்தித்தால் அவர்கள் கேள்வி எழுப்புவார்கள். நாம் பதில் கூற வேண்டும், இதுபோன்ற விமர்சனங்களை கூட ஏற்க மறுக்கும் ஒரு அகம்பாவ போக்கு பாஜகவிடம் தெரிகிறது. மெர்சல் படத்தில் மோடி அரசு அமுல்படுத்திய, வியாபாரிகளையும், மக்களையும் சிரமப்படுத்திய ஜி.எஸ்.டி. வரியை விமர்சிக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? அரசு மருத்துவமனைகளின் அவலத்தை காட்சிபடுத்துகிறார்கள். அதுவும் உண்மைதானே? ஏன் இவர்கள் கொந்தளிக்க வேண்டும். விசயம் என்னவென்றால் ஏற்கனவே மக்களின் எதிர்ப்பால் மெர்சலாகி நிற்கும் மோடி அரசும், பாஜக தலைவர்களும் மெர்சல் படத்தால் மேலும் மெர்சலாகி என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் செய்வதரியாது திகைத்து போய் நிற்கும் சூழலை நாம் பார்க்கிறோம்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மெர்சல் திரைப்படத்தின் கருத்துக்களை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் எந்த சமூகத்தையும், மதத்தையும் அவதூறாக பேசினால், குற்றப்படுத்தினால் எஸ்.டி.பி.ஐ. கட்சி கடுமையாக எதிர்க்கும். அப்படித்தான் விஸ்வரூபம், துப்பாக்கி பட பிரச்சினைகளில் முஸ்லிம்கள் எதிர்த்தார்கள். முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக மதிக்கும் குரானுடைய வசனங்கள் கொச்சைப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும் குற்றவாளிகளாக, தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டார்கள், அதுமட்டுமின்றி சமூக பிளவை உருவாக்குகின்ற காரணத்தினால் முஸ்லிம்கள் அப்படங்களை எதிர்த்தார்கள். இப்போதும் நாங்கள் சொல்கிறோம் எந்த சமூக மக்களையும் அவமதிக்கும் விதத்தில், கொச்சைப்படுத்தும் விதத்தில், சமூக பிளவுகளுக்கு வழி வகுக்கும் விதத்தில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டால் அப்படங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி எதிர்க்கும். அதே நேரத்தில் அரசின் தவறுகளை ஜனநாயக முறையில் விமர்சிக்கும் படங்கள் வெளியிடப்பட்டால் எஸ்.டி.பி.ஐ. கட்சி எப்போதும் வரவேற்கும். அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கும். அதில் சொல்லப்பட்ட கருத்துக்களை வரவேற்கிறோம். அதுமட்டுமின்றி அந்த படத்தில் வெளியிடப்படுள்ள காட்சிகளை நீக்கக்கூடாது என்பதை வலியிறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆனால் பாஜக தலைவர்கள் இப்போது மெர்சல் படத்தை ஆதரிக்க கூடியவர்களை மிக கொச்சையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை, தமிழிசை சௌந்தர்ராஜன் மிக கொச்சையாக விமர்சித்திருக்கிறார். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்றும் நினைவு கொள்ளாமல் தலைமை பண்புகள் அற்ற நிலையில் விமர்சித்திருக்கிறார். மெர்சல் திரைப்படத்தை குறித்து திருமாவளவன் அப்படி என்ன சொல்லியிருக்கிறார். மெர்சல் திரைப்பத்தின் மிரட்டல்கள் மூலம் நடிகர் விஜயை வலைத்துப்போட பாஜக நினைக்கிறது என்று விமர்சிக்கிறார். இது ஒரு அரசியல் ரீதியான கருத்து, இதனை அரசியல் ரீதியாக எதிர் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தனிப்பட்ட முறையில் தனி நபர் தாக்குதலை கொச்சையாக விமர்சிப்பதை தமிழிசை சௌந்தர்ராஜன் மேற்கொண்டுள்ளார். இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த கருத்தை தமிழிசை சௌந்தர்ராஜன் திரும்பபெற்று மண்ணிப்பு கேட்க வேண்டும். ஆனால் அதை செய்வார்களா, அந்த நாகரீகம் அவர்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

பாஜகவின் தேசிய தலைவர் எச்.ராஜா எல்லாவற்றையும் மதரீதியாக திருப்ப முயலுகிறார். சமீபத்தில் தொடர்ச்சியாக சந்தானத்தையும், விஜயையும், திருமுருகன் காந்தியையும், சீமானையும் ஒரு கிருஸ்தவரை போன்று விமர்சனம் செய்கிறார். நாங்கள் கேட்கிறோம் சைமனுக்கும், ஜோசப்பிற்கும் அரசியல் செய்யும் தகுதி இல்லையா? கிருஸ்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் எந்த மதங்களை சேர்ந்தவர்களாகஇருந்தாலும் அரசின் தவறுகளை விமர்சனம் செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. எனவே எச்.ராஜா ஆனவமான, மத ரீதியில் ஆதாயம் அடைய துடிக்கும் போக்கை கைவிட வேண்டும். நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்போக்கை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நடிகர் விஜயினுடைய வாக்காளர் அடையாள அட்டையை அவருடைய அனுமதியின்றி டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து மக்களை மதரீதியில் பிளவுப்படுத்த துடித்து கொண்டிருக்கும் எச்.ராஜாவின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

காசிமேடு மீனவர்களின் போராட்டம் நியாயமானது; காவல்துறையின் தடியடி செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது;

இன்று(23.10.2017) காலை சென்னை, காசிமேடு பகுதியில் மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மீனவர்கள் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனை காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்ற ரீதியில் தடியடி மேற்கொண்டுள்ளனர். அச்சம்பவத்தால் மீனவர்கள், அப்பாவி பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் மண்டை உடைக்கப்பட்டு இரத்தம் வலிந்திருக்கிறது. ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது காட்டுமிராண்டி தனமாக தடியடி மேற்கொண்ட நிகழ்வை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவர்களின் இந்த கோரிக்கை போராட்டம் என்பது நீண்ட நாட்களானது. அதுவரை மீனவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூக தீர்வு காணாமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் என்ன செய்து கொண்டிருந்தார். நாள் தோறும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அரசியல் கருத்துக்களை பேசுவது, உட்கட்சி விவகாரங்களை பேசுவது, ஒருவரை ஒருவர் விமர்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதுதான் ஒரு மீன்வளத்துறை அமைச்சரின் வேலையா? மீன்வளத்துறை அமைச்சர் நீண்ட நாட்களாக போராடி கொண்டிருக்கும் அம்மக்களை அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதை விட்டுவிட்டு சாலையில் இறங்கி போராடும் சூழலுக்கு அவர்களை தள்ளி இப்போது அவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் போது தடியடி நடத்துவது எந்தவிதத்தில் நியாயம். மீனவமக்களின் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி துணை நிறுகும். அவர்களின் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி முழுமையாக வரவேற்கிறது. மீனவமக்கள் மீது தடியடி மேற்கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இச்சந்திப்பின் போது கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் உடனிருந்தார்.

மதுரையில் இன்று (22/10/2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது;

மெர்சல் திரைப்படத்தில் பதிவிடப்படுள்ள காட்சிகள் அனைத்தும் மக்களின் உணர்வுகளுக்கு பிரதிபலித்து, அரசு செய்யும் தவறுகளை ஜனநாயக முறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது போன்ற நல்ல கருத்துக்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து வரவேற்கும்;

மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவலங்கள்குறித்த கருத்துக்களை பதிவு செய்ததற்காக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் திரைப்படத்துறையினரை மிரட்டுவதையும், படத்தின் காட்சிகளை நீக்க வலியுறுத்துவதையும் திரைப்படத் துறையினருக்கும்,கலைஞனுக்கும் இருக்கும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.இதனை எஸ்.டி.பி.ஐ. வன்மையாக கண்டிக்கிறது.

மெர்சல் திரைப்படத்தில் அரசியல் சார்ந்து பதிவிடப்பட்டுள்ள காட்சிகளில் சில கூடுதல் குறைவுகள் இருக்கலாமே தவிர அது உண்மையாக மக்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பே ஆகும். ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்த பிறகு மக்கள் பெறும் கொதி நிலையில் இருக்கிறார்கள் அந்த கொதி நிலைதான் இப்படித்தில் காட்சியாக்கப்பட்டதற்கு மக்களின் தரப்பில் மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. பாரதிய ஜனதாவின் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சியில் இருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் சிலிண்டர் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட விபத்தில் பலியான 70-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமைகள் அரசால் ஏற்பட்டது என்பதை படத்தில் காட்சியாக வடிவமைப்பதில் என்ன தவறு இருக்கிறது? ஜிஎஸ்டி வரி விதிப்பு நல்ல திட்டம் என சொல்ல அரசுக்கு உரிமை இருக்கிறது என்றால், அந்த திட்டம் நாட்டிற்கு மிக ஆபத்தானது என்பதை சொல்ல மக்களுக்கும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஊடகங்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இக்கருத்துக்களை ஜனநாயக தண்மையுடன் எடுத்துக்கொள்ளாமல் அதற்கு மாற்றமாக பாஜக தலைவர்களான தமிழிசை சௌந்தர்ராஜன் இப்படி கருத்து கூறுபவர்களுக்கு என்ன துணிச்சல் இருக்கிறது என்று மிரட்டுகிறார் மறு பக்கம் எச்.ராஜா நடிகர் விஜயை கிருஸ்தவராக சித்தரிக்க முயலுகிறார்.

மோடி அரசை விமர்சிப்பது இந்துக்களை விமர்சிப்பதை போன்று பேசி வரும் பாஜக தலைவர்களின் கருத்துக்கள் கடுமையான கண்டனத்திற்குரியவை. இந்த விமர்சனத்தை இந்துக்களுக்கு எதிரான விமர்சனம் என்று சொல்வது திசை திருப்பும் செயலாகும். இந்த விமர்சனம் இந்துக்களுக்கு எதிரானது அல்ல, மத்திய அரசுக்கு எதிரான விமர்சனம் ஆகும். அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கும் சுதந்திரமாகும், இதற்கு திரைப்பட கலைஞர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.

மெர்சல் திரைப்படத்தில் தவறான, பொய்யை உமிழக்கூடிய அல்லது சமூகத்தின் மீதான பிளவுகளை உருவாக்கும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை மாறாக விழிப்புணர்வூட்டும் கருத்துக்களையும்,அரசினுடைய தவறான செயல்பாடுகளை விமர்சிக்கும் கருத்தாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இது போன்ற கருத்துக்களை ஒரு கலைஞனாக திரைப்படத்தில் பதிவு செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் இது போன்ற நல்ல கருத்துக்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. அதே போன்று இந்த கருத்துக்களுக்காக நடிகர் விஜய் உள்ளிட்ட மெர்சல் திரைப்பட படக்குழுவினரை மிரட்டும் பாரதிய ஜனதா கட்சியினரை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தொடர்ந்து பா.ஜ.க.வின் தலைவர்கள் கருத்துறிமைக்கு எதிராகவும், சமூக ஒற்றுமைக்கு எதிரான மிரட்டல் மற்றும் வன்முறை போக்கை கையாண்டு வருகிறார்கள். மோடி அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்யும் பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார்கள். இது ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல என்பதை நாங்கள் எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம். தனிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ள மெர்சல் திரைப்படத்தில் அரசியல் சார்ந்து பதிவிடப்பட்டுள்ள காட்சிகளை சில அரசியல் காரணங்களுக்காக மெர்சல் திரைப்படகுழுவினர் அக்காட்சிகளை நீக்கக்கூடாது என்பதை கேட்டுக்கொள்கிறேன். ஆரோக்கியமான விமர்சனங்களை எதிர்ப்பது என்பது சர்வாதிகார ஃபாசிச போக்காகும். சர்வாதிகாரமான ஃபாசிசத்தோடு செயல்படக்கூடாது என்று பாஜக தலைவர்களை நாங்கள் எச்சரிக்கிறோம்.

அதுமட்டுமின்றி விஸ்வரூபம் மற்றும் துப்பாக்கி படப்பிரச்சினைகளை மெர்சல் திரைப்படத்துடன் முடிச்சிப்போடும் செயலை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டிக்கிறது. விஸ்வரூபம் மற்றும் துப்பாக்கி திரைப்படங்களில் ஒரு சமூகத்தினரை தீவிரவாதிகளாக சித்தரித்த செயலைதான் இஸ்லாமியர்கள் எதிர்த்தார்கள். அதோடு முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக மதிக்கும் திருக்குர்-ஆனுடைய வசனங்களை இப்படித்தில் தவறாக சித்தரித்தார்கள். இக்காரணங்களுக்காகத்தான் இஸ்லாமியர்கள் இப்படங்களை எதிர்த்தார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றல்ல. மெர்சல் திரைப்படத்தில் வெளியிடப்படுள்ள காட்சிகள் அனைத்தும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் காட்சிகள்தான். எனவே, இந்த இரண்டு பிரச்சினைகளையும் முடிச்சிப்போடும் செயல் என்பது தவறானதாகும். இதனை ஒரு போதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஏற்றுக்கொள்ளாது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்;

அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மருத்துவ முகாம்கள், நிலவேம்பு குடிநீர்வழங்கும் முகாம்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் கிளைகள் தோறும் முன்னெடுத்து வருகிறார்கள். டெங்குவின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளதால் டெங்கு ஒழிப்பு பணிகளை இன்னும் அதிகமாக நடத்திட கட்சியின் தொண்டர்களுக்கு அறிவிறுத்தி இருக்கிறோம். டெங்கு காய்ச்சலை குணப்படுத்த அரசு மற்றும் பிற அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை போன்று பொதுமக்களும் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள எஸ்.டி.பி.ஐ. பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது;

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிகளில் சுமார் நூறு தொகுதிகளை தேர்ந்தெடுத்து அந்த நூறு தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுவதற்கு தகுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அதன் அடிப்படையில் கட்சியின் உறுப்பினர்களை அதிகரிப்பது, கட்சியின் கொள்கைகளை பரவலாக்குவது, அதன் மூலம் பலப்படுத்துவது போன்ற செயல்களை முன்னெடுத்துள்ளோம்.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் அளவிற்கு எஸ்.டி.பி.ஐ. தயாராக இருக்கிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை தயார் செய்து வைத்திருக்கிறோம். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலையும் எதிர் கொள்ளும் அளவிற்கு கட்சியின் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். அதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் நூறு தொகுதிகளில் அதற்குரிய பணிகளை வீரியமாக்கி உள்ளோம். எப்போது உள்ளாட்சி மற்றும்சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதனை சந்திப்பதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தயாராக இருக்கிறது.

தமிழக அரசு மற்றும் ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்;

தமிழக அரசு மற்றும் ஆட்சியாளர்களை பொறுத்தவரை மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் ஆட்சியை காப்பாற்றுவதற்காக மத்திய அரசுக்கு கும்பிடுப்போடும் செயல்களிலேயே மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறார்கள். அரசும், அமைச்சர்களும் மாவட்டம் தோறும் சென்று அரசு செலவில் கோடிக்கணக்கான ரூபாயில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தும் செயல்களிலும், அதற்கு பந்தல் நடுவதிலும், அதனை ஏற்பாடு செய்வதிலுமே தங்களது நேரத்தை போக்கி வருகின்றனர். மாறாக மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. இந்நிலையில் சில நேரங்களில் சில அமைச்சர்கள் பேசி வரும் பேச்சுக்கள் தமிழக அரசியலில் புரியாத புதிராகவும், மக்கள் மன்றத்தில் அப்பேச்சுக்கள் கேலிப்பொருளாகவும், ஊடகத்தில் காட்சி பொருளாகவும் மாறிவருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ”எல்லாவற்றையும் மோடி பார்த்துக்கொள்வார்” என்று மோடியிடம் சரணடைவது போன்று அவர் பேசி இருப்பது அதிமுக அமைச்சர்களின் மனநிலையை அவர் பிரதிபலித்தது போன்று அமைந்திருக்கிறது.

அதிமுகவை பல கூறுகளாக பிரித்து அக்கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தை முடக்கி தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒழிக்கும் செயல்திட்டங்களை ஏற்படுத்தி உள்ள பாஜகவினர்களை எதிர்க்கும் நிலையில் இல்லாத ஒரு திராணி அற்ற அரசாக அதிமுக அரசு செயல்பட்டுவருகிறது. இதற்கு மாறாக அதிமுக அமைச்சர்கள் எல்லாவற்றையும் மோடி பார்த்துக்கொள்வார் என்று பேசி வருவதை அதிமுக தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், தமிழக மக்களும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

பேரிடர்களை எதிர்கொள்ளும் அளவிற்கு தமிழக அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்;

வடகிழக்கு பருவமழை நெருங்கி வருகிறது. அதற்கான காலங்கள் துவங்க இருக்கும் இந்நிலையில் அதற்கான தடுப்பு பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மிக வேகமாக தமிழக அரசு துரிதப்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன். கடந்த காலங்களில் தொடர்ந்து பேரிடர்கள் சென்னை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களை பெரிதும் பாதித்திருக்கிறது என்று தமிழக அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஆலத்தூரன்பட்டி இளைஞர் படுகொலையில் காவல்துறையினரின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ஆலத்துாரான்பட்டியில்நஜ்முதீன் (வயது 20) என்ற இளைஞர் முன் விரோதத்தின் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்களாள் நேற்று (21.10.2017) படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்து சம்பந்தப்பட்டவர்களை பிடித்து சென்ற காவல்துறையினர் கொலை வழக்கில் கைது செய்யாமல் மாறாக மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள்விரைவில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது என்பதை அறிகிறோம். இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறையின் உயர் அதிகாரிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கொலை வழக்கில் வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்திட வேண்டும். கொலை செய்யப்பட்டவருடைய குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இப்பேட்டியின் போது மதுரை மாவட்ட தலைவர் ஜாபர் சுல்தான், பொதுச்செயலாளர் பிலால்தீன், செயலாளர்கள் கமால் பாஷா, சிக்கந்தர், சாகுல், துணைத் தலைவர் சீமான் சிக்கந்தர், பொருளாளர் சுப்ரமணியம், ஊடக பொறுப்பாளர் சிக்கந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை