ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு!-ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!


இது குறித்து இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் ஆலையால், சுற்றிலும் வசிக்கும் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்றால் அந்த ஆலை தேவையா? என்பதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்.

இந்தியாவில் குஜராத், கோவா மாநிலங்களின் எதிர்ப்பால் அப்பகுதியில் அமைய இருந்த தாமிர உருக்காலை 1994ல் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்க திட்டமிட்டு திட்டம் முழுமை பெறுவதற்குள் மக்களின் எதிர்ப்பை சந்தித்தது. 200 கோடி ரூபாய் செலவோடு நிறுத்திவைக்கப்படும் என்ற மகாராஷ்டிர அரசின் கண் துடைப்பு நாடகம் மக்கள் மத்தியில் தெரியவர தங்கள் கொள்கையில் இருந்து பின் வாங்க மறுத்த அம்மாநில மக்கள், ‘ஆலையை அகற்ற வேண்டும்’ என்கிற ஒற்றை கோரிக்கையிலேயே விடாப்பிடியாக இருந்தனர். தொடர்ந்து நடந்த போராட்டங்களால் நிலை குலைந்த மகாராஷ்டிர அரசு, ஆலை பணிகளை முற்றிலும் நிறுத்த உத்தரவிட்டது. கார்ப்பரேட் முதலைகளிடம் இருந்து தன் மண்ணை காப்பாற்றினார்கள் மகாராஷ்டிர மாநில மக்கள்

இதனால் மகாராஷ்டிராவில் இருந்து கிளம்பிய ஸ்டெர்லைட் நிறுவனம் கர்நாடகா, கேரளாவில் இடம் தேடி அலைந்தது. தாமிரம் தயாரிக்கும் இந்த ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து அம்மாநில அரசுகள் ஆலைக்கு அனுமதி கொடுக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டன. போபால் விஷ வாயு கசிவு சம்பவத்துக்கு பிறகு பல மாநிலங்களிலும் ஆபத்து மிகுந்த ஆலைகளை அமைக்க எதிர்ப்பு வலுத்ததால், மாநில அரசுகள் பின்வாங்கின. இதனால் சோர்ந்து போயிருந்த உரிமையாளர் அனில் அகர்வாலுக்கு பச்சை கம்பள வரவேற்பு கொடுத்து வரவேற்றது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு. அ.தி.மு.க அரசின் இந்த துரோகச்செயல் தூத்துக்குடி மக்கள் மீது தொடுத்த விஷவாயு போர் என்று தற்போது நிரூபணமாகி இருக்கிறது.

தொடர்ந்து நடைபெற்றுவரும் ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரம் தயாரிக்கும் பணிகளால் பலவகைகளில் அவதிப்படும் மக்களாக மாறிவிட்டனர் தூத்துக்குடி மக்கள். இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தற்போது விரிவாக்கம் செய்யப்பட விருப்பதை எதிர்த்து அப்பகுதி பொது மக்கள் நடத்திய கடையடைப்பு மற்றும் ஒன்று கூடல் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ஆனால், தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் கடல் வளத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அப்பேரழிவு ஆலையை மேலும் 600 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்ய மத்திய-மாநில அரசுகள் இந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எவ்வாறு அனுமதி கொடுத்தன என்பது தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படவிருக்கும் குமரெட்டியபுரம் பகுதி பொதுமக்கள் ஏற்கனவே இந்த ஆலையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். தங்களது பகுதியில் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டால் இன்னும் கொடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில் தான், வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்று நோய், மலட்டுத் தன்மை, சிறு நீரகக்கல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆலையை விரிவுபடுத்த அனுமதிப்பது அப்பகுதியில் வாழும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்வதற்கு சமமான செயலாகும். இதை அரசே செய்யக்கூடாது. எனவே, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு கொடுத்த அனுமதியை அரசு ரத்து செய்வதுடன் முதன்மை ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமத்தையும் திரும்பப் பெற்று அதை உடனடியாக மூட வேண்டும். தமிழ்நாடு அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்திய நிலத்தை, நில உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒப்படைக்க வேண்டும். ஸ்டெர்லைட் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தன்னெழுச்சியாக பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராடும் மக்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு இப்போராட்டத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க மறுத்தால் தூத்துக்குடி மாநகரில் மட்டும் நடைபெறும் இப்போராட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாநில அளவில் மாபெரும் மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை