ஹஜ் மானியம் ரத்து: மத உணர்வுகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் மத்திய அரசின் சதி; எஸ்.டி.பி.ஐ

ஹஜ் மானியம் ரத்து: மத உணர்வுகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் மத்திய அரசின் சதி!
 
அனைத்து விதமான புனித யாத்திரைகளுக்கும் வழங்கப்படும் மானியங்களையும், நிதி ஒதுக்கீடையும் ரத்து செய்ய
பாஜக அரசு முன்வருமா? - எஸ்.டி.பி.ஐ. கேள்வி
சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று (ஜன.17) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அச.உமர் ஃபரூக் கலந்துகொண்டார்.
 
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறியதாவது;
 
ஹஜ் மானியம் ரத்து - மத உணர்வுகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் மத்திய அரசின் சதி:
 
இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனிதப் பயணத்திற்கு இந்த ஆண்டு முதல் மானியம் வழங்கப்பட மாட்டாது எனவும், அந்த நிதி சிறுபான்மை பெண்களுக்கு கல்வி அளிக்க பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பு மூலம் புதிய சர்ச்சையை உருவாக்கி, அதன் மூலம் மத்திய அரசின் நிர்வாக கோளாறால் நாடு சந்தித்துள்ள சீரழிவை மக்களிடமிருந்து மறைக்கவும், இந்தியாவின் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி பிரச்சனையை மறைப்பதற்குமான சதித்திட்டமே இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ளது.
 
ஏனெனில், ஹஜ் மானியம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கூட 2022க்குள் ஹஜ் மானியத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை படிப்படியாக மேற்கொள்ள வேண்டும் என கூறும் நிலையில், அவசர அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டதன் பின்னணியில் அரசுக்கு ஏற்பட்டுள்ள் நெருக்கடியை மறைக்கும் போக்கும், கூடவே அதன் வழக்கமான முஸ்லிம் விரோதப் போக்கும் உள்ளதை அறிய முடிகிறது.
 
ஹஜ் மானியம்  என்பது அது யாத்திரிக்கர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்படுவது இல்லை. மாறாக, அது ஹஜ் மாதங்களில் ஏர் இந்தியா நிறுவனத்தில் இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கப்படும் கட்டணத்திற்கு வழங்கப்படும் சலுகையே. அதாவது சாதாரண காலங்களில் ரூ.30 ஆயிரமாக இருக்கும் விமானக் கட்டணம், ஹஜ் காலங்களில் லாப நோக்கில் ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதனால் பல ஆயிரம் கோடி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கிறது.  அந்த உயர்த்தப்பட்ட கட்டணத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே மானியம் என்ற பெயரில் சலுகையாக வழங்கப்படுகிறது.  ஆகவே, வழக்கமான சாதாரண கட்டணத்தை விட அதிக தொகையையே ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வழங்குகின்றனர். இதனால், பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தான் லாபம் அடைகிறதே தவிர, ஹஜ் பயனாளிகள் எந்த நன்மையும் அடைவதில்லை.
 
ஹஜ் மானிய ரத்தை முஸ்லிம் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வரவேற்க்க காரணம், மானியம் என்ற பெயரில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை, இஸ்லாமியர்களின் புனித பயணத்திற்காக ஒதுக்கப்படும் நிதியாக சித்தரிப்பதே காரணம். 
 
வளர்ச்சியின் பெயரால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை எட்டிய நிலையில், தங்கள் வாக்குறுதியிலிருந்து மக்களின் கவனத்தை சிதறடிக்க, மதவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டதை மத்திய மோடி அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன.
 
ஹஜ் மானியம் தொடர்பாக தற்போது நடக்கும் விவாதங்கள் மக்களின் மத உணர்வுகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் ஒரு ஏமாற்று வேலையாகும். மதசார்பற்ற நாட்டின் ஆன்மீக பயணத்திற்கு மானியமா? என்ற கேள்வியை முன்வைக்கும் இந்துத்துவா அமைப்புகள், ஆண்டுதோறும் அமர்நாத் மற்றும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைகளுக்கு செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடையும், உ.பி. மற்றும் உத்தரகாண்டில் நடைபெறும் கும்பமேளாக்களுக்கு அரசு சார்பாக செலவிடப்படும் கோடிக்கணக்கான நிதிகளையும் அவர்கள் ஆன்மீகத்திற்கான நிதி ஒதுக்கீடாக கணக்கில்கொள்வதில்லை. இந்தியா முழுவதும் மீட்டெடுக்கப்பட வேண்டிய ஏராளமான நதிகள் இருக்கும்போது, புனித நதியான கங்கைக்கு மட்டும் முன்னுரிமை அளித்து, பல லட்சம் கோடி திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து அவர்கள் கேள்வி கேட்பதில்லை. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் ஜெருசலம் புனித யாத்திரைக்கும், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கும் நிதி ஒதுக்கிய போது எந்த குரலையும் உயர்த்தாத பாஜக போன்ற கட்சிகள், மானியம் என்ற பெயரில் பொதுத்துறை விமான நிறுவனத்துக்கு வழங்கப்படும் கட்டண சலுகையை மட்டும் தூக்கிப்பிடிப்பது என்பது முஸ்லிம் விரோத போக்காகும்.
 
சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்துக்காகவும், கல்விக்காகவும் நிதி ஒதுக்க வேண்டிய அரசு, மானியம் என்ற பெயரில் வழங்கிவந்த கட்டண சலுகையை மடைமாற்றி தான் சிறுபான்மை சமூக பெண்களின் கல்வி நிதி ஒதுக்க முடியும் என்பது கண்டிக்கத்தக்கது. பாஜகவின் மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்கள், ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்து கூற முடியுமா? உண்மையில் இந்த அரசுக்கு முஸ்லிம்களின் மீது, முஸ்லிம் பெண்களின் மீது அக்கறை இருக்குமானால் சச்சார் கமிஷன் பரிந்துரைகள், மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்தலாமே? ஆக, பாஜக அரசின் முஸ்லிம் பெண்கள் மீதான அக்கறை என்பது வெறும் கண் துடைப்பே ஆகும்.
 
ஹஜ் மானியம் என்ற பெயரில் வழங்கி வந்த கட்டண சலுகையை திரும்பப்பெறும் மத்திய அரசு, அனைத்து விதமான புனித யாத்திரைகளுக்கும் வழங்கப்படும் மானியங்களையும், நிதி ஒதுக்கீடையும் ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்ய மத்திய பாஜக அரசு முன்வருமா? புனித யாத்திரைக்கும், ஆன்மீக நிகழ்வுகளுக்கு அரசு நிதி, மானியம் வழங்கப்படாது என்ற முடிவுக்கு அரசு முன்வருமா? அவ்வாறு முன்வருமானால் அரசின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால், அரசியலுக்காக மதவாதத்தை முன்னிலைப்படுத்தும் பாஜக அரசு அதற்கு ஒருபோதும் தயாரில்லை. 
 
 
டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம் - வெளிமாநில கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்:
 
டெல்லி யூ.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து வந்த திருப்பூர் மாணவர் சரத்பாபு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மெரிட் மூலம் டெல்லியில் உள்ள யூ.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டமேற்படிப்பு மேற்கொண்ட மாணவர் சரத்பிரபு, எய்ம்ஸ் கல்லூரி விடுதியிலேயே தங்கி எம்.டி. படிப்பை படித்து வந்த அவர், விடுதியில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
கடந்த 2016ம் ஆண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற்ற விசாரணையில் அது கொலை என தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், மாணவர் சரத்பிரபுவின் மர்ம மரண செய்தி, வெளிமாநில உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
 
கடந்த வாரம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் டாக்டர் மாரிராஜ், அங்கு பேராசிரியர்களால் நிகழ்த்தப்பட்ட சாதிய பாகுபாடு காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதே சாதி பாகுபாடு காரணமாக கடந்த ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழகத்தை சேர்ந்த தலித் மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார்.
 
இதுபோன்று வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள் மரணமடைவதும், சாதிய பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொள்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆகவே, தமிழக அரசு இந்த விவகாரத்தை மிக தீவிரமாக கருத்தில்கொண்டு, வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
 
பெட்ரோல் விலை உயர்வு - தினந்தோறும் விலையை மாற்றியமைக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்:
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி முதல், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் உரிமையை மத்திய பாஜக அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்தது. அப்போது முதல், பெட்ரோல், டீசல் விலைகள் மக்களுக்கே தெரியாமல் தினமும் உயர்த்தப்பட்டு தற்போது வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
 
தேசிய அளவில் பல்வேறு பிரச்னைகள், சர்ச்சைகள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் சப்தமில்லாமல் கடந்த 6 மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.8.45-ம், டீசல் விலையை ரூ.9.10-ம் உயர்த்தியுள்ளன. இதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தில் முடிவடைந்துள்ளது.
 
தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக எதிர்கட்சியாக இருந்த போது, 10 பைசா பெட்ரோல் உயர்வுக்கே மிகப்பெரும் போராட்டங்களை நடத்தியது. மேலும், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டது. ஆனால், ஆட்சியில் அமர்ந்த பிறகு முந்தைய அரசின் கொள்கையை பின்பற்றுவதோடு, எண்ணெய் நிறுவங்களுக்கு ஆதரவாக பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் உரிமையை வழங்கியுள்ளது. இதன் மூலம் பாஜகவின் கடந்தகால போராட்டங்கள் வெறும் அரசியலுக்கான நாடகம் என்பது தெரிகிறது. 
 
பெட்ரோல், டீசலின் அடக்கவிலை ரூ.30க்கும் குறைவாக உள்ள நிலையில் அதை விட இரு மடங்குக்கும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதை ஏற்க முடியாது. ஆகவே, அடித்தட்டு மக்களை வாட்டி வதைக்கும் வகையில் தினந்தோறும் விலையை மாற்றியமைக்கும் முறையை ரத்து செய்வதோடு, எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை