சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று (ஜன.09) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அச.உமர் ஃபரூக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தஞ்சை ஃபாரூக், ஏ.கே.கரீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறியதாவது;
 
மத்திய அரசுக்கு அளித்த பாராட்டு பத்திரமாகவே ஆளுநர் உரை அமைந்துள்ளது ஏமாற்றமளிக்கிறது:
 
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் இடம்பெற்ற தமிழக ஆளுநரின் உரை ஏமாற்றமளிக்கிறது. புதிய திட்டங்கள் குறித்தோ, சிறுபான்மை மக்களின் நலனுக்கான எந்த ஒரு திட்டம் குறித்த அறிவிப்போ ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.
 
ஆளுநர் உரையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் எதிர்க்கப்பட்டு, அவரது மரணத்துக்குப் பின் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு அளிக்கப்பட்ட பாராட்டு, தூய்மை இந்தியா திட்டத்துக்கு அளிக்கப்பட்ட பாராட்டு, மாநில அரசால் கோரப்பட்ட ஓகி புயல் நிவாரண நிதியில் மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு பாராட்டு என மத்திய அரசு எழுதி தந்த உரையாகவே ஆளுநர் உரை அமைந்திருந்தது.
 
ஜி.எஸ்.டி. வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடை தவனை முறையில் மத்திய அரசு அளிக்கிறது. அந்த வகையில் கடந்த தவனையில் தமிழகத்திற்கு ரூ.102 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை விட குறைவானது. அதே வேளையில், ஜி.எஸ்.டி. வரிவசூலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த செயலை கண்டிக்காமல், ஆளுநர் உரையில் ஜி.எஸ்.டி.க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதன் மூலமாக ஆளுநர் உரையிலும் மத்திய அரசின் தலையீடு உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, செயலற்று கிடக்கும் கூடங்குளம் அணு உலை குறித்தோ, காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாய் அறிவிக்க முயலும் மத்திய அரசின் திட்டம் குறித்தோ, தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் சட்டங்களை வளைத்து நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய அரசின் திட்டம் தொடர்பில் தமிழக அரசின் நிலைபாடு குறித்த கருத்து ஆளுநர் உரையில் தெரிவிக்கப்படவில்லை.
 
குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நீட் மசோதாவின் நிலை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசால் அமைக்கப்படாத விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாடு என்னவென்பது குறித்தும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை. மொத்தத்தில் மத்திய அரசுக்கு அளித்த பாராட்டு பத்திரமாகவே ஆளுநர் உரை அமைந்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.
 
கூட்டாட்சி தத்துவத்தை மீறும் ஆளுநரின் ஆய்வு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம்:
 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றார். இது மாநில சுயாட்சியில் தலையிடும் மத்திய அரசின் செயல்பாடாகவே எஸ்.டி.பி.ஐ. கருதுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் இத்தகைய ஆளுநரின் ஆய்வுப் பணிகள் நடக்காத போது, பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களில் மட்டும் ஆளுநரின் ஆய்வை மத்திய அரசு ஊக்கப்படுத்துவது வரம்பு மீறும் செயலாகும். தமிழகத்தின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படுவதை தமிழக அரசு தொடர்ந்து வேடிக்கைப் பார்த்து வருகிறது.
 
கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையில் வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் நடைபெறும் ஆளுநரின் ஆய்வுப்பணிக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரிக்கிறது. மேலும், எதிர்காலத்திலும் இதுபோன்ற ஆய்வுப் பணிகள் மற்ற மாவட்டங்களிலும் தொடருமானால் எஸ்.டி.பி.ஐ. கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபடும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வழக்கறிஞர்கள் மாநாடு:
 
எதிர்வரும் பிப்ரவரி 10 அன்று, திருச்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் பங்குபெறும் வழக்கறிஞர்கள் மாநாடு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய நிர்வாகிகள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
 
உள்ளாட்சி எல்லை மறு சீரமைப்பில் குளறுபடி:
 
உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் மறு சீரமைப்பின் வரைவு பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகள் பல பகுதிகளாக சிதறடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உள்ளாட்சி பிரநிதித்துவத்தில் சிறுபான்மை சமூக மக்களின் பிரதிநிதித்துவம் குறைந்து போகும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே, சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை முஸ்ளிம் சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ள நிலையில், தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் மறு சீரமைப்பால், உள்ளாட்சி அமைப்புகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைந்து போகும் வாய்ப்புள்ளது. ஆகவே, தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
 
அதேவேளையில் இந்த குளறுபடிகளை விரைவில் சரிசெய்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக தள்ளிவைக்கப்பட்டு வரும் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். ஏனெனில், உள்ளாட்சி அமைப்புகள் காலியாக உள்ளதால் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
சிறைவாசிகள் விடுதலையை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்:
 
10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் திண்டுக்கல்லில் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த விடுதலை நடவடிக்கையை எந்தவித பாரபட்சமும் காட்டாமல் உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த விடுதலை நடவடிக்கையில் அனைத்து வழக்குகளை சார்ந்தவர்களும் உட்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் அரசியல் படுகொலை வழக்குகள், குண்டுவெடிப்பு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆகவே தமிழக அரசு பாரபட்சம் இல்லாமல் அனைத்து தரப்பு சிறைக் கைதிகளையும் விடுதலை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
 
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்:
 
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களைக் கருத்தில் கொண்டும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும் போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தால், அரசுப் பேருந்துகளை முறையான பயிற்சி இல்லாதவர்களை கொண்டு அரசு இயக்குவதால், பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஆகவே இந்த விவகாரத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை