திருச்சியில் கர்ப்பிணி பெண் பலி எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

போக்குவரத்து காவல் அதிகாரியின் அராஜகத்தால் கர்ப்பிணி பெண் பலி! - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
கொலை வழக்கு பதிவு செய்து காவல் அதிகாரியை பணி நீக்கம் செய்ய கோரிக்கை!

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருச்சி தூவாக்குடி தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா-உஷா தம்பதியர் தலைக்கவசம் அணியவில்லை என்பதை காரணங்காட்டி, லஞ்சம் பெறுவதற்காக அந்த இருசக்கர வாகனத்தை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் துரத்திச் சென்று எட்டி உதைத்துள்ளார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த வாகனத்தில் இருந்த கர்ப்பிணியான உஷா மீது மற்றொரு வாகனம் மோதி படுகாயம் அடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ராஜா படுகாயங்களுடன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலைக்கவசம் அணியாமல் கர்ப்பிணி மனைவியுடன் சென்ற ராஜா தனக்கு லஞ்சமாக எதுவும் தராத காரணத்தினாலேயே 4 கிமீ தூரம் வரை பின்னால் துரத்தி சென்று எட்டி உதைத்து இத்தகைய அராஜக போக்குடன் காவல் ஆய்வாளர் காமராஜ் நடந்துகொண்டுள்ளார். இதனால் கர்ப்பிணியும் அவரது சிசுவும் உயிரிழக்க நேரிட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண் பாதுகாப்பு, முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் மகளிர் தினத்தில் ஏற்பட்ட இத்தகைய துயர நிகழ்வு, வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

சமீபகாலமாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காக ஒரு கிரிமினல் குற்றவாளியை போன்று துரத்திச் சென்று தாக்கும் அராஜக செயல்கள் தமிழத்தின் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களின் வாகனத்தை லத்தியை கொண்டு வீசுவதும், துரத்திச் சென்று எட்டி உதைப்பதுமான அதிகாரத்தை காவல்துறைக்கு எந்த சட்டம் வழங்கியிருக்கிறது? இதுதொடர்பில் நீதிமன்றத்தின் பல அறிவுரைகள் இருந்தும், லஞ்சம் பெறுவதற்காக காமராஜ் போன்ற சில அதிகாரிகள் இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற ஒருசில அதிகாரிகளின் நடவடிக்கை ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றது.

காவல்துறையில் ஒருசில அதிகாரிகளால் நிகழும் இத்தகைய அராஜக போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். திருச்சி சம்பவத்தில் குற்றவாளியான போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவுக்கு இழப்பீடாக ரூ.25 லட்சமும் அவருடைய கணவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கர்ப்பிணி பெண் உஷாவுக்கு நீதி கேட்டும், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளரின் அராஜக போக்கை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்ட 3 ஆயிரத்தும் மேற்பட்ட பொதுமக்களை பொறுப்புடன் கையாளாமல் அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலருக்கும் ரத்தம் வழிந்தோடும் அளவுக்கு காவல்துறை பலம் பிரயோகித்துள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப் பதிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பொறுப்பற்ற செயலால் நிகழ்ந்த உயிர்பலிக்கு நீதிகேட்டு, தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய போக்கை காவல்துறை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காவல்துறையில் ஒரு சில அதிகாரிகளால் நிகழும் இத்தகைய சம்பவங்கள் இனியும் நிகழா வண்ணம், தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை